காலிப் பை

பிறந்ததிலிருந்து கைகளுக்குள்ளாகவே இருந்த மகளை அவளுக்கு முற்றிலும் அறிமுகமில்லாத ஒரு பள்ளிக் கட்டிடத்திற்கு நடுவே கல்வியின் பொருட்டு அமர்த்திவிட்டு வந்த அந்த முதல்நாளின் தவிப்பை போலவே இருந்தது பள்ளி சென்றுவர அவளை தனியார் வேனில் ஏற்றிவிட்ட இந்த முதல்நாளும். அவள் எல்.கே.ஜி, யு.கே.ஜிக்காக வீட்டிற்கு அருகிலேயே இருந்த பள்ளிக்கு சென்றுவந்து கொண்டிருந்த பொழுதெல்லாம் முதல் மூன்று மாதங்களைத் தவிர பெரிதாக வேறெந்த தவிப்பும் ஏற்படவில்லை. வீட்டிலிருந்து ஒரு 6 கி.மீ.க்கு அப்பால் உள்ள நகரின் சிறந்த பள்ளியில் அவளுக்கு ஒன்றாம் வகுப்பு சீட் கிடைத்து தொலைத்ததில் இருந்து வந்தது வினை.


எத்தனை வேலை இருந்தாலும் டிமிக்கி கொடுத்துவிட்டு பறவை தன் குஞ்சைக் கவ்விக்கொண்டு போவதைப் போல பள்ளியில் கொண்டு போய் விட்டுக் கொண்டும், அழைத்துக்கொண்டும் வந்து கொண்டிருந்தேன். பள்ளிக்கு போக முடியாத சமயங்களிலும் வெட்டியாக இருந்த மச்சினனை அனுப்பி அழைத்து வந்து கொண்டிருந்தேன். மச்சினனுக்கு திடீரென வேலை கிடைத்து விட்டதாலும். எனக்கு மிகச் சரியாக பள்ளி விடும் நேரங்களில் வேலை வருவதாலும் வேறு வழியின்றி தனியார் வேனின் உதவியை நாட வேண்டியதாயிற்று.

தனியார் வேனின் நம்பரையும், ஓனர், டிரைவர், என இருவரின் நம்பரையும் என்னுடைய மொபைலில், மனைவியின் மொபைலில், பதிவு செய்ததோடு தனியாக ஒரு டைரியிலும் எழுதி வைத்துக் கொண்டோம். பத்தாததற்கு அந்த வேனில் வந்துபோகும் மற்றொரு மாணவனின் அப்பா நம்பரையும் வாங்கி பதிவு செய்து கொண்டோம். வேனில் இருந்து எப்படி இறங்க வேண்டும், மற்ற மாணவர்களுக்காக வேன் காத்திருக்கும்போது வேனில் இறந்து இறங்கிவிடக்கூடாது என ஒன்றாம் வகுப்பு படிக்கும் மகளிடம் திரிஷ்யம் மோகன்லால் கணக்காக ஓராயிரம்முறை டியூசன் எடுத்து, டிரைவரிடம் அழாத குறையாக பத்திரமா பாத்துக்குங்கன்ணே என ஒன்பாதாயிரம் முறை ரிக்வெஸ்ட் கொடுத்து எல்லாம் முடிந்து முதல்முறையாக அவள் தனியார் வேனில் பள்ளிக்கும் சென்று விட்டாள்.

இனியெல்லாம் இப்படித்தான், எல்லாம் நல்லபடியாக நடக்கும், அவள் வளர்கிறாள், கவலைப்படாதே, என மனம் தனக்குத்தானே பல்வேறு ஆறுதல்களையும், சமாதானங்களையும், வழங்கிக் கொண்டே இருந்தாலும், 
என் டூவீலரின் முன்டேங்க் மட்டும் குட்டி இல்லாத கங்காருவின் காலிப்பையாட்டம் துருத்திக்கொண்டே இருக்கிறது.

Comments

Popular Posts