ZOOTOPIA - சமத்துவத்தை சொல்லித்தரும் குழந்தைகளின் சினிமா.

 

றும்புகளை? எலிகளை? ரோபாட்டுகளை? மீன்களை? கார்களை? டிராகன்களை? விலங்குகளை வைத்து இத்தனைச் சுவாரஸ்யமான ஒரு கதையா? என ஹாலிவுட்டின் ஒவ்வொரு அனிமேஷன் திரைப்படங்களங்களும் நமக்கு எப்பொழுதும் பெரும் ஆச்சர்யங்களை அளிப்பவை.

அப்படியவர்கள் உருவாக்கிய எல்லா திரைப்படங்களிலும், மனிதர்களுக்கு இத்தனை கற்பனை சக்தி உண்டா என்கிற கேள்வி எப்பொழுதும் நமக்கு தொற்கி நிற்கும். அதீத கற்பனை சக்தியுடனவர்கள் உருவாக்கிய அத்தனை அனிமேஷன் திரைப்படங்களிலும் முதன்மையான திரைப்படமாக ஒரு படத்தை நிறுத்த வேண்டுமென்றால் டிஸ்னி பிக்சாரின் Zootopia (2016) வைத்தான் நிறுத்த வேண்டும்.

Zootopia குழந்தைகளுக்காக எடுக்கபட்ட படமாக இருப்பினும் மொத்த மனித இனமும் பின்பற்ற வேண்டிய பல தத்துவங்களையும், சித்தாங்கங்களையும் குறியீடுகளாக கொண்ட ஒரு அற்புதமான படைப்பு. படம் நெடுக மனித இனம் கற்றுக் கொள்ள ஏராளமான பாடங்கள் பொதிந்து இருக்கின்றன.

மனிதர்களுக்கு பதிலாக விலங்குகளை கதைமாந்தர்களாக வைத்து படைக்கப்பட்ட ஒரு அற்புத உலகம்தான் ஜூடோபியா. படத்தின் கதைப்படி கற்காலம் முடிந்து, வேட்டை விலங்குகளும், இரை (தாவர) விலங்குகளும் சிந்திக்கத்துவங்கி, தங்களுக்கான ஒரு நகரத்தை படைத்து எல்லோரும் ஆரோக்கியமான பரிணாம மாற்றத்துடன் வாழ்ந்து வருகிறார்கள். Zootopia எனப் பெயரிடப்பட்ட அந்த நகரத்தின் காவல் அதிகாரிகளாக பலம் நிறைந்த வேட்டை விலங்குகள் மட்டுமே இருக்கின்றன. 'பலத்தில் குறைந்த, தாவரஉன்னிகளான முயல் போன்ற விலங்குகள் காவலர்கள் ஆக தகுதியற்றவர்கள், விவசாயம் செய்ய மட்டுமே தகுதியானர்கள்.' என்கிற பொதுபுத்தியை உடைத்து, முதன்முறையாக காவலர் பணிக்கு 'ஜூடி ஹார்ப்ஸ்' என்கிற பெண் முயல் ஒன்று தேர்வாகிறது. படத்தின் மையக்கதாபாத்திரமான இந்த முயலின் வழியே 'இவர்கள் இதற்காக, இந்த தொழிலுக்காக மட்டுமே படைக்கப்பட்டவர்கள்' என்கிற கருத்தை உடைத்து, முயற்சித்தால் எவரும் எவராகவும் ஆகலாம் என்கிற நம்பிக்கையை படம் இயல்பாகவே குழந்தைகளிடத்தில் விதைக்கின்றது.

அதே ஊரில் 'நிக்' என்கிற நரி பல தந்திரங்களை செய்து, ஊரை ஏமாற்றி வாழ்ந்து வருகிறது. உண்மையில், நரி அப்படிப்பட்ட வாழ்வை வாழ விரும்பவில்லை, அதன் லட்சியம் வேறு. அதனுடைய லட்சியத்திற்கு வேட்டை விலங்காக பிறந்த அதனது பிறப்பும், 'நரிகள் தந்திரம் செய்பவை' என்கிற பொதுபுத்தியும் தடையாக இருக்கின்றன என்கிற நரியின் பின்கதை நமக்குச் சொல்லப்படுகிறது. நிக்கின் கதையையும் பிறப்பையொற்றி முன்வைக்கப்படும் பொதுபுத்திகளை நோக்கி கேள்வி எழுப்பி சிந்திக்கச் செய்கிறது.

Zootopia வில் மர்மமான முறையில் காணாமல் போல விலங்குகள் பற்றிய வழக்கு ஒன்றின் மூலம் ஜூடியும்,நிக்கும் நண்பர்களாக இணைந்து துப்பு துலக்குகிறார்கள் என்பதே படத்தின் மைய முடிச்சு.

'வேட்டை விலங்குகள் மரபணு ரீதியாகவே வேட்டையாடப் பிறந்தவர்கள். வேட்டைதான் அவர்களின் பிறவி குணம். இன்று இயல்பாக எல்லோரிடமும் நட்பு பாராட்டும் அவர்கள் நாளை வேட்டை விலங்குகளாக மாறி, மற்ற விலங்குகளைக் கொன்று விடுவார்கள்' என்கிற 'பொது புத்தியை' வலுவாக நிறுவி, அதன் மூலம் அதிகாரத்தையும், பதவிகளையும் அடைந்து கொள்வதற்காகவே, zootopiaவில் ஒரு குழு சில வேட்டை விலங்குகளை கடத்தி, 'நைட்கிராவலர்' என்கிற செடியின் மூலம் அவ்விலங்குகளுக்கு வேட்டையாடும் வெறியை செயற்கையாக உண்டாக்கி வைத்திருக்கின்றன என்பதையும், அரசியல் அதிகாரத்திற்காக ஒற்றுமையாக வாழும் விலங்குகளிடத்தில் பிரிவினையை உண்டாக்கி அதிகாரத்தை அடையவேண்டி இச்செயலை செய்திருக்கின்றன என்பதையும் ஜூடியும்,நிக்கும் கண்டுபிடித்து Zootopiaவில் அமைதியையும், வேற்றுமையில் ஒற்றுமை என்கிற அதன் கொள்கையையும் எப்படி நிலை நாட்டுகிறார்கள் என்பதாக நிகழ்கிறது படத்தின் மீதிக்கதை.

இந்த நிலம் குறிப்பிட்ட மதத்தவர்க்கு, இனத்தவர்க்கு உரியது. குறிப்பிட்ட மத,இன அடையாளமில்லாதவர்கள் எல்லாம் இந்த நிலத்தில் வாழத் தகுதியற்ற வந்தேறிகள். அவர்களையெல்லாம் வெளியேற்றிவிட்டு 'ஒரே மதம், ஒரே இனம்' கொண்ட அகண்ட நிலமாக மாற்றுவோம் எனச்சொல்லி, மக்களிடம் பிரிவினையை உண்டாக்கிவிட்டு, அதிகாரத்தை அடைந்து கொள்ளும் தந்திரமிக்க இந்திய, உலக அரசியல்வாதிகள் அனைவரையும் Zootopia வில்லன்களாக சித்தரித்ததோடு, அத்தகைய பிரிவினைவாதிகளை ஒதுக்கிவிட்டு, மக்கள் பேண வேண்டிய ஒற்றுமையையும், சக மனிதர்கள் மேல் கொள்ள வேண்டிய அன்பையும், சமத்துவத்தையும் பற்றி குழந்தைகளின் மொழியில் பேரற்புதமாக படம் பேசியிருக்கின்றது.

நிறவெறி, மதவெறி, இனவெறி, ஜாதிவெறி, போன்ற பல பிரிவினைகள் நிறைந்திருக்கும் காலத்தில் குழந்தைகளுக்கு சமத்துவத்தையும்,
அறத்தையும், நீதியையும் சொல்லித்தர Zootopia போன்ற படைப்புகள் அத்தியாவசியத் தேவையாக இருக்கின்றது.


Comments

Popular Posts