பாரதி,நான்,நித்யா மற்றும் ஜீவா

ஒரு ஓவியத்தை கையாள்வதைப்போலத்தான் ஜீவாவை அணுகுகிறாள் நித்யா, அவளின் அக்கறை நிறைந்த பராமரிப்புகளுக்குப்பின்னர் அவனும் ஓவியமாகவே மிளிர்கிறான். ஓவியத்தை தொடங்குவது முதல் முடிப்பது வரையிலான இடைப்பட்ட நேரங்களை பொறுமையாக பார்த்துக்கொண்டிருக்க எவரும் விரும்புவதில்லை. அதே போல ஒரே ஓவியத்தை திரும்ப திரும்ப வரைவதற்கும். எல்லோருக்கும் அந்த நேரமும் அப்படி பட்ட ஓவியமும் தேவையாக இருப்பதில்லை, அப்படித்தான் எனக்கும் இருக்கிறது, மேலாக இப்போதெல்லாம் ஜீவாவை ஓவியமாக காண்கிற பொறுமையும் என்னிடம் இருப்பதில்லை. பாரதிக்கும் அப்படித்தான் இருக்க வேண்டும் இல்லையென்றால் ஜீவா இல்லாத வீட்டுக்கு போயிடலாமாப்பா எனச்சொல்லியிருப்பாளா பாரதி. 


பாரதி – என் மகளதிகாரம், என் இப்போதைய ஒரே பிடிப்பு, எனக்கும் நித்யாவிற்குமான பெருங்காதலின் சாட்சி. 4 வயதிற்குமேல் குழந்தைகள் உலகிலிருந்து வழிதவறி,கர்த்தரின் கைகளையும் கர்த்தரையும் தொலைத்த ஆட்டுக்குட்டி, அவளுக்கு இப்போது 11 வயது, சாரசரி குழந்தைகள் அனுபவிக்கின்றன எந்த விளையாட்டுகளிலும் அவள் ஈடுபட்டதில்லை ஜீவாவை கவனித்துகொள்ள நித்யாவிற்கு உதவி செய்யவே அவளுக்கு நேரம் சரியாக இருக்கிறது. இன்னமும் குழந்தைதனத்திற்கு ஏங்குகிற ஏக்கம் வழிந்தபடி இருக்கும் முகம் கொண்டவள், இவளையும் நித்யாவையும் எப்படி இந்த துன்பகரமான சூழ்நிலையிலிருந்து விடுவிப்பதென யோசித்து கொண்டிருந்த நாளில் தான் அவள் அவ்வாறு சொல்லியிருந்தால்,

“ஒரு அக்கா நீ இப்படி பேசலாமா? பாவம்ல ஜீவா நம்ம தம்பியில்ல”
”அவனுக்கு நம்மள விட்டா யார் இருக்கா ? யார் அவன பாத்துக்குவா? போன்ற கிளிஷே வசனங்கள் எதுவும் தோன்றாத மன நிலையில்தான் நானும் இருந்தேன். இந்த 8 ஆண்டுகள் அப்படித்தான் இருக்க வைத்திருக்கிறது என்னை. 

நான் - நான் ராம்குமார், கோவையில் உள்ள ஒரு பெரிய ஹாரன் உற்பத்தி கம்பெனியின் கடைநிலை பொறியாளன். இப்போதைய இந்த வாழ்க்கையிலும் கடைபிணம்,கடைஉயிர், இரண்டுக்கும் இடைப்பட்டவனே நான், இப்போதைக்கு அவ்வளவே நான், நித்யா இல்லாத நான், அல்லது எனக்கு மிக பிடித்த நித்யாவின் மென்புன்னகை இல்லாத நித்யாவை கொண்ட நான்.அந்த பரிசுத்த புன்னகை இல்லாத நித்யா.

நித்யா - என் சொந்த அத்தைப்பெண், நான் நான்காம்வகுப்பு படிக்கும் போது காய்ச்சலில் கிடந்த எனக்கு ரொட்டி வாங்கி வந்ததோடு இல்லாமல் ஊட்டியும் விட்ட கணத்திலயே முடிவெடுத்திருந்தேன் நித்யாதான் என் மனைவியென்று.. ஆம் அப்படி குழைந்தைதனமாகத்தான் ஆரம்பித்தது, பின்னர் 10ஆம் வகுப்பில் என் நாய் சீஸர் காரில் அடிபட்டு கட்டுகளோடு கிடந்த போது தினமும் வந்து என் நாய்க்கு பிஸ்கட் தந்து பழக்கப்படுத்தியிருந்தாள் எஜமானனான என்னைவிட சீஸர் நித்யாவிற்குதான் அதிகமாக வாலாட்டுவது போல தோன்றியபோதும் நித்யாவை கைபற்றும் எண்னம் என்னிடம் அதிதீவிரமாகியிருந்தது,.. மென்மையான மெல்லிசைக்கும் நித்யாவிற்கும் பெரிதாக வித்தியாசம் எதுவுமிருக்காது, யார் புன்னகை மிக மென்மையானது என நித்யாவிற்கும் மோனலிசா ஒவியத்திற்கும் போட்டி வைத்தாள் நிச்சயமாக நித்யாவே ஜெயிப்பாள் உலகின் மிக சிறப்பான குழிவிழும் கன்னத்தை கொண்ட, மென் புன்னகைக்காரி,

இந்த புன்னகைக்காரிக்கு அதிர்ந்து சிரிக்கவே தெரியாது என்பது பிரண்ட்ஸ் படத்தில் நடிகர் வடிவேலுவின் தலையில் சுத்தியல் ஒன்று விழும் காட்சிக்கு ஒட்டுமொத்த தியேட்டரே விழுந்தடித்து சிரித்துக்கொண்டிருக்கும் போது கூட அவள் இதழோரமாக மென்மையாக சிரித்ததை பார்த்தபோதுதான் தெரிந்தது, இந்த உலகின் மென்மையானவைகளின் அத்தனை பட்டியலிலும் முதன்மையானவள் இவளே என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை என்னிடம் உண்டு, இவளை கைவிட்டுவிடாதே உடனே பற்றிக்கொள்ளென என்னுள் பொங்கிய காதல் சொல்லியது.. சொல்லியதொடு இல்லாமல் யாருமற்ற சாலை ஒன்றில் வழக்கமான பேச்சுக்கள் ஒய்ந்து மவுனங்கள் பேசத்தொடங்கிய போது, அக்காதல் நதியாக பிரவாகமெடுத்து நரம்புகளின் வழி பாய்ந்து அவளின் கரம் எனும் கடலில் மிருதுவாக சங்கமித்தது. அவள் திரும்பி பார்த்தாள், என் காதலை ஒப்புவித்தேன்.. என் வாழ்வின் மிக முக்கிய மகிழ்ச்சிகரமான ஸ்லோமோஷன் காட்சியொன்று நடந்தேறியது.. அவளுக்கும் விருப்பம்தானாம். அந்த மென்புன்னகை அவளை முந்திக்கொண்டு அவள் காதலை சொன்னது,

சொந்த அத்தைப்பெண், படித்தவன், வேலையிலிருப்பவன், இத்தியாதி, இத்தியாதி சுமூக காரங்களை கொண்ட எங்கள் காதல் திருமணத்தில் முடியாமல் போயிருந்தால்தான் ஆச்சர்யம். எல்லாம் இனிதாகவே நடந்து முடிந்தது. ஜீவாவை பிரசவிக்க மருத்துவமனையின் ஆப்ரேஷன் தியேட்டரில் நுழையும் வரையிலும் அவளின் பூக்கள் விரியும் சிரிப்பின் மகரந்ததூள்களில் மிதந்து கொண்டேதான் இருந்தேன் ஜீவா இப்படியென தெரிந்த நொடியிலிருந்து எல்லாம் தொலைந்து போனது,அல்லது அனைத்தையும், விழுங்கிக்கொண்டேதான் வந்து சேர்ந்தான் ஜீவா.

ஜீவா  – ஜீவாவை நர்ஸ் ஏந்திக்கொண்டுவந்து ”ஆண்குழந்தை பிறந்திருக்கிறது” என காட்டுவது போலவும் ஜீவா பொக்கைவாயை திறந்து அழுவது போலவும் நொடிக்கொரு தரம் தடுக்கி விழுந்த கனவோடு மருத்துவமனையின் காத்திருப்புச்சேரில் அவனுக்காக காத்திருந்தேன், மடியில் பாரதி உறங்கிக்கொண்டிருந்தாள், பகல் கனவு பலிக்காது என்பது உண்மைதான் போல அவனின் அறிமுகம் இன்குபேட்டருக்குள்ளாகத்தான் கிடைத்தது , வைக்கோல் மீது இயேசு சிலுவையுடன் பிறந்ததை போல எதேதோ ஒயர்கள் சூழ சாந்தமாக படுத்திருந்தான்.

ஜீவா குறைபிரசவ குழந்தை என்றார்கள், எடை போதவில்லை என்றார்கள்,மூளை வளர்ச்சியடையவில்லை என்றார்கள், முதுகுதண்டும் வளர்ச்சியடையவில்லை என்றார்கள், இவன் உயிர்பிழைப்பது கடினம் என்றார்கள், ஊனமாய் பிறந்திருக்கிறான் என்றார்கள், இறுதியாக இவன்தான் உன் கனவில் வந்தழுத பொக்கைவாய் மகன் என்றார்கள், பாரதியை இறுக அனைத்தபடி நித்யா ? என்றேன் மயக்க நிலையில் இருக்கிறார் தெளிய நான்கு மணி நேரமாகும் என்றார்கள். பிறகு பார்க்கலாம் என்றார்கள்.. ஆனால் அடுத்த எட்டு வருடத்திற்கு அவளிடம் அந்த மென்சிரிப்பை மட்டும் உன்னால் பார்த்துவிட முடியாதென மட்டும் யாரும் சொல்லவில்லை.

இதோ எட்டு வருடங்களாகிற்று, பாரதியின் குழைந்தைதனத்தையும், நித்யாவின் மென்சிரிப்பையும், எங்களின் இயல்பையும் முறித்துப்போட்டுவிட்டு படுக்கையில் ஒரு போன்சாய் மரத்தை போல, தன்னைத்தானே அசிங்கமாக்கிக்கொள்ளும் ஓவியத்தை போல எச்சில் வழிந்தபடி நாள்முழுதும் எதையாவது அரற்றிக்கொண்டே கிடக்கிறான் ஜீவா,

அவனின் நான்கு வயதில் கேட்டேன்

“ஜீவா மாதிரி குழந்தைகள கவனிச்சுக்க நிறைய ஹோம் இருக்கு நித்தி, இவன அங்க சேத்தி விட்டுறுவோம், போதும் இவ்ளோ நாள் நம்ம கஷ்டபட்டது போதும், பாரதி பியூச்சர நினைச்சு பாரு, அவளும் பாவம்தான? இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி இவன் கஷ்டபடறத நாம பாக்கிறது?

“ஜீவா மாதிரி அங்கயும் நிறைய குழந்தைக இருப்பாங்களா?”

“ஆமாம்”

”எப்படி ராம் மனசாட்சியே இல்லாம இந்த நிலைமையில இருக்கிற குழந்தைகள அங்க விடறாங்க?”

”புரிஞ்சிக்க நித்யா, இப்படிப்பட்ட நிலைமைல இருக்கிறதாலதான் விடறாங்க, அவங்க இயல்பு பாதிக்கப்படுதுங்கிறதுக்காகதான் விடறாங்க, பாரதி மாதிரி, என்ன மாதிரி, உன்ன மாதிரி பழைய சந்தோசங்கள திரும்ப கொண்டு வரத்தான் விடறாங்க”

“நம்மள நம்பி வந்த ஜீவன கைவிடறது பாவம் ராம், சின்ன சின்ன சுயநலமான காரணங்களுக்காகவெல்லாம் நான் ஜீவாவ விட்டுக்குடுக்க மாட்டேன், நீங்க புரிஞ்சுக்குங்க ராம், உடம்புல எந்த குறையும் இல்லாம இருக்கிற நானே ஹாஸ்டல்ல, அம்மாவோட அருகாமைய நினைச்சு எத்தன ராத்திரி அழுதுருக்கேன் தெரியுமா? ப்ளீஸ் ராம்…. ஜீவா பாவம்.

“விவாதம் இப்படி முடியும்போது ஹாஆஆஅஹஹுஅஹா” பரிகாசம் செய்வதைப்போல அரற்றினான் ஜீவா, அப்போது விழுந்தது வன்மம் இவன்மீது,

வளர்ந்து வளர்ந்து இதோ இன்றைய இரவு விருட்சமாகி இருக்கிறது.. எந்த அன்பு சுயநலமில்லாமல் இருக்கிறது?,அப்படி சுயநலமாக இருப்பதில்தான் என்ன தவறு உள்ளது.?. எல்லாம் பக்குவப்பட்டாகிவிட்டது இனி நிகழ்த்த வேண்டியிருப்பது கொலை மட்டுமே, தான் ஈன்ற தன் சவலைப்பிள்ளை குட்டியை தன் மற்ற குட்டிகளுக்கு வேண்டி தானே உன்னும் மிருகங்களின் சித்தாந்தம்தான் இது, உயிர்களின் அடிப்படையும் அதுதானே? நாகரிகம், மனிதஅறிவு எல்லாவற்றையும் மீறி இப்போது ஒரு காடு எனக்குள் பரந்து விரிந்து கிடக்கிறது, காட்டின் விதிகளும்.

அவனுக்கான இன்றைய இரவுப்பாலில் ஐம்பது டைசோஃபார்ம் மாத்திரைகளை கலந்தாகிற்று, ஒவ்வோரு டைசோஃபார்ம்களிலும் ஒர் இரவு தூக்கம் ஒளிந்திருப்பது போல மொத்தமாய் இந்த ஐம்பது மாத்திரைகளில் மற்றவர்களை பொருத்தமட்டிலும் ஒரு கொலை, ஒரு மரணம், ஒளிந்திருக்கிறது, என்னை பொருத்தவரையில் ஒரு விடுதலை ஒளிந்திருக்கிறது, எங்களுக்கும் ஜீவாவிற்குமான விடுதலை. நிறைவேற்றினேன்.


இந்த எட்டு வருடங்களில் எப்போதுமில்லாமல், நடுசாமத்தின் விளக்கவொன்றா, அமைதியான இந்த நேரத்தில். நான் ஊட்டிய இந்த பாலை மொத்தமாக குடிக்கும் முன்பாகவேனும், எனக்கு பிடித்த, என்னைப்பிடித்த அந்த நித்யாவின் அந்த மென்சிரிப்பை சிரித்துக்காட்டியிருக்கலாம், ஒருவேளை இதெல்லாம் நிகழ்ந்திருக்காது, படுபாவி இந்த பாலை முழுவதுமாக குடிக்கவைத்து, வாய் துடைத்து, கழுத்துவரை போர்வையை போர்த்தி விட்ட இந்த நொடியில் இதோ அந்த மென்சிரிப்பை உதிர்க்கிறான் ஜீவா.

Comments

Popular Posts