தமிழுடன் ஒரு சந்திப்பு.

அறிவும்,உணர்வும் ஊட்டும் போதி மரம்,  மொழி,சமயம்,சமூகநீதி பேரறிவுத் தத்துவம், திராவிட சித்தாந்தத்தின் மாபெரும் சொத்து, முனைவர்/பேராசிரியர் 'தோழர்.கரச'வுடன் (எனக்கு டார்லிங்) நேற்று மாலை ஒரு நெகிழ்ச்சியான சந்திப்பு நிகழ்ந்தது.

இணையத்தின் தோழர்களை நேரில் சந்திக்கிற நிகழ்வுகள் என்பது சுவாரஸ்யமானதுதான் ஆனால் அது ஒரு சம/சக சிந்தனையாளர்கள் சந்திப்பாகவே முடிந்து கொள்ளும். அதேவேளை, அந்தச்சந்திப்பு, முருகர் மாதிரியான ஆளுமைகள் என்றால் அது கடலை முதன்முதலாக காணச் செல்லும் ஒரு சிறுவனின் மனநிலைக்கு ஒப்பானது.

கொரானா பேரிடர் காரணமாக அவரது கோவை வருகையில் சொற்பமான நபர்களை மட்டுமே சந்திப்பதாக அவர் முடிவு செய்திருந்தார். தவிர, அவர் திருவனந்தபுர பல்கலைகழகத்தில் சொற்பொழிவுக்கு தயாராகவும் வேண்டியிருந்த காரணத்தால் அவர் இந்த சந்திப்பை இந்த சொற்ப நபர்களுடன் முடித்துக்கொள்ளும் ஒரு சூழல் சிக்கலில் மாட்டியிருந்தார். (பேரிடர் முடிந்தபின் பிற்பாடு இன்னும் அதிகமான மக்களுடன் சந்திக்கும் திட்டங்கள் அவரிடம் உள்ளது. எனைப்போலவே டார்லிங்கை சந்திக்க விரும்பும் நபர்கள் விசனப்பட வேண்டாம்)

அறிவுக்கடலை சந்திக்கின்ற வேளையில் முத்தாய்ப்பாக, ஒரு பேரன்பு கடலையும் காணும் வாய்பும் நேற்று கிட்டியது எங்கள் பாக்கியம் ஆகும். அறிவுக்கடல் கரச/ அன்பின் கடல் காசி அண்ணன் என இருவரின் அரவணைப்பில் கழிந்த நேற்றைய மாலைப்பொழுது வாழ்வின் புதையல் தருணங்கள் ஆகும்.

மொத்த சந்திப்பும் காசி அண்ணன் வீட்டில்தான் நிகழ்ந்தது. பிரதமர் மோடி முதல் முதல்வர் ஸ்டாலின் வரை பெரும்புகழ் பெற்ற வீராவும், அவனை பேரன்பால் அரவணைத்த காசி அண்ணா, மற்றும் அவரது குடும்பத்தின் கதையும் அனைவரும் அறிந்ததே!!

நேற்று நாங்க சந்திக்க கூடிய பொழுதில் வீரா மிகவும் கலக்கமுற்றவனாக இருந்தான். அவன் காயம் இன்னமும் ஆறவில்லை. அவன் கால்களின் காயம் "எத்தனை மருந்து போட்டும் ஆற மாட்டேன் என்கிறது"  என காசி அண்ணன் சொன்னார். தோராயமாக நேற்றைய அதே நாளில்தான் பழங்குடியின சிறுவன் ஒருவன் மீதும் மனிதக்கொடூரர்கள் வன்முறையை நிகழ்த்தியிருந்தார்கள். இந்த வன்முறைதான் ஒவ்வொரு ஜீவனையும் எத்தனை தூரம் வதைக்கின்றது? வீரா/பழங்குடி மாணவன் போன்ற உயிர்களை வதைக்கும் இந்த மனிதக்கொடூரர்கள் வசிக்கும் இந்த உலகில் காசியண்ணன், அண்ணி, மற்றும் அவரது மகள் மாதிரியான பேரன்பாளர்கள் இருக்கப்போய்தான்  இன்னமும் கொஞ்சமேனும் பசுமையும்,மழையும்,ஈரமும் இந்த உலகில் மிஞ்சியிருக்கிறது. காசியண்ணனின் பேரன்பான சிரத்தையும், அக்கறையான உழைப்பும் வீராவிற்கு கிடைத்ததும், அதை நாங்கள் நேரடியாக தரிசித்ததும் நான் பெற்ற பெரும் பேறு!!

கரச - அறிவுக்கடல். எப்பேர்பட்ட ஆச்சர்யமான மனிதர். இவசொல்வதைப்போல  கச்சேரி களைகட்டியது. இவர் வந்த நொடியில் இருந்து நிகழ்ந்த அத்தனை மணித்துளியும் காலப்பொக்கிசங்கள். ஈழம், சிதம்பரம், வாஷிங்டன், ஆமஸ்டர்டாம் என பூமத்திய ரேகைகளாக நீளும் கரச அறிவுப்பெருங்கடலின் பேச்சலைகளில் கால் நனைத்து லயித்துக்கிடப்பது என்பது வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒரு மாபெரும் உணர்வுப்பிழம்பாட்டம். பிக்பாஸ் வீட்டின் காமிராக்கள் போல கரச எனும் அறிவாளுமையின் ஒவ்வொரு பேச்சும் கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டிய வரலாற்றுச் சின்னங்கள். தமிழ் சமூகத்தில் சாதியும் அதன் தோற்றமும் என அவர் நிகழ்த்திட்ட உரையாடல்கள் காலப்பெட்டகத்தின் மாபெரும் சொத்துக்கள். சங்க இலக்கிய பாடல்கள், அதன் தோற்றங்கள், அதன் வரலாறுகள் என அவர்ப்பேசப்பேச அதைக் கேட்டுக் கொண்டிருக்கின்ற பெரும் பேறு வார்த்தைகளால் அளவிட முடியாதது.!!

வாழ்க நீ எம்மான்!! என்றொரு தமிழ்ச் சொற்றொடர் உள்ளது. வாவ் ப்ரோ!! என வார்த்தைக்கு வார்த்தை சொல்வதைப்போல இந்த கரச டார்லிங்குக்கு வாழ்க நீ எம்மான் என வார்த்தைக்கு வார்த்தை சொல்லிக்கொண்டே இருக்கலாம். அத்தனை அழகானது அவருடனான உரையாடல்கள், பரிபாடல்,கலித்தொகை என அவர் தமிழ் பாட அதை நாம் கேட்கிற தருணங்கள் அத்தனையும் பேரழகானது.

கரச மாதிரியான மாபெரும் தமிழ்/சமூகநீதி பேராசான்கள் வாழ்கிற சமகாலத்தில், நாமும்/நானும் வாழ்வதும். ஏதோவொரு சின்னஞ்சிறு புள்ளியில் அவர்க்கு நான் பிரியம் கொண்ட தோழனாக இருப்பதும் இப்பிறவியில் (அடுத்த பிறவியில் நம்பிக்கை இல்லை) நான் பெற்ற பெரும்பேரு!!

அன்பே கரச!! வாழ்க நீ எம்மான்.!!

வாழிய வாழியவே இன்பத் தமிழ்போல்  என்றும் வாழியவே !!! 













Comments

Popular Posts